தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போராட்டம் நடத்தியதற்கு நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பிறப்பித்தாலும் தயாராக இருக்கிறோம் - தபெதிக

ரயில்வே தேர்வுகளை வெளி மாநிலத்தில் நடத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை நீதிமன்றத்தில் ஆஜராகும் படி கூறப்பட்டுள்ள நிலையில், பிடிவாரண்ட் பிறப்பித்தாலும் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

court order to present at court for protest against railway exam thanthai periyar dravida kazhagam refuse
போராட்டம் நடத்தியதற்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்; பிடிவாரண்ட் பிறப்பித்தாலும் தயாராக இருக்கிறோம் - தபெதிக

By

Published : Jul 14, 2023, 4:43 PM IST

போராட்டம் நடத்தியதற்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்; பிடிவாரண்ட் பிறப்பித்தாலும் தயாராக இருக்கிறோம் - தபெதிக

கோயம்புத்தூர்: கடந்த 2022-ஆம் ஆண்டு ரயில்வே அலுவலக தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் விண்ணப்பித்த தமிழக இளைஞர்களுக்கு வட மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இதனை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு திராவிட அமைப்புகள் தமிழ்நாட்டிலேயே தமிழ் இளைஞர்களுக்கு தேர்வு மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அதேபோல் காசி தமிழ் சங்கமத்திற்கு இலவச ரயில் விடப்படும் பொழுதும் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கோவையிலிருந்து ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என கோவையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அப்போது ஆர்ப்பாட்டம் நடத்திய இரண்டிற்கும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு அழைப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அச்சமயம் ஆர்ப்பாட்டத்திற்கு வாய்மொழியாக கோவை காவல்துறை அனுமதி அளித்ததாகவும், ஆனால் தற்பொழுது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை வந்துள்ளதை ஏற்க மாட்டோம் என கூறியும், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம் எனக் கூறி கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சியினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து பேட்டி அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், “2022 -ஆம் ஆண்டு ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட அலுவலகப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டபோது அதற்கு தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த இளைஞர்களுக்கு அந்த தேர்வை ஜம்மு காஷ்மீர், ஹரியானா, திருவனந்தபுரம் போன்ற வெளி மாநிலங்களில் எழுத வேண்டும் என கூறி தேர்வு மையங்கள் அங்கு அமைக்கப்பட்டு இருந்தது.

அதனை கண்டித்தும் தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாய்வழியாக அனுமதி அளித்த காவல்துறை தற்போது அந்த ஆர்ப்பாட்டம் நடத்தியதால் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதாகவும், அமைதி சீர்குலைந்து விட்டதாகவும் காரணம் கூறி வழக்கு தொடுத்து வருகின்ற 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளார்கள்.

இது முற்றிலும் தமிழர்களுக்காக போராடிய இயக்கங்களை சிதைக்கின்ற வழியாகும். சட்டம் ஒழுங்கை பற்றி பேசுகின்ற இந்த காவல்துறை கடந்த 25 ஆண்டுகளாக கோவையின் மிக முக்கியமான பகுதியாக உள்ள ரத்தின சபாபதிபுரம் என்ற பகுதியில் 25 ஆண்டு காலமாக அத்வானிக்கு அங்கு தான் வெடிகுண்டு வைத்தார்கள், அங்கு பலரும் இறந்து போனார்கள் என நினைவஞ்சலி செலுத்துகிறோம் என கூறி மேடை போட்டு பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணியை சார்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள்.

அதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வரப்படுகிறார்கள். துணை ராணுவ படையினரும் அழைத்து வரப்பட்டு கோவையை சுமார் ஒரு வார காலம் அல்லோலப்படுத்துகிறார்கள். அப்போது கோவை மக்கள் அந்த ஒரு வார காலத்திற்கு நிம்மதியாக இருக்க முடியாது. அப்போதெல்லாம் கெடாத சட்டம் ஒழுங்கு, அமைதி, தமிழ் இளைஞர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டது குற்றம் என்று காவல்துறை கூறுகிறது.

அதேபோல் காசிக்கு பிரதமர் மோடி தமிழ்நாட்டில் இருந்து காசு இல்லாமல் ரயில்களை விட்டார். அப்போதும் நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள இந்து மதத்தின் புண்ணிய ஸ்தலங்களான ராமேஸ்வரம், திருச்செந்தூர் போன்ற பகுதிகளுக்கு கோவையிலிருந்து ரயில் விட வேண்டும் என ஆர்ப்பாட்டமும், போராட்டமும் மேற்கொண்டோம். தற்போது இந்த இரண்டிற்கும் நாங்கள் செய்தது குற்றம் என்று கூறிய நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளார்கள்.

நாங்கள் அதனை ஏற்க மாட்டோம் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டோம். வேண்டுமானால் நீதிமன்றம் எங்கள் மீது பிடிவாரண்ட் பிறப்பித்தால் அதற்கும் தயாராக இருக்கிறோம், சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம். தமிழர்களுக்காக போராடியதற்கு இதுதான் பரிசு என்றால் அதனையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

இது குறித்து தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இது அரசின் கவனத்திற்கு சென்று இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் தற்பொழுது நாங்கள் எடுத்துள்ள முடிவு அரசின் கவனத்திற்கு செல்லும் என்று நினைக்கிறோம், அவ்வாறு சென்றால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Coimbatore: பெண் காவலரை தாக்கியதாக சமூக ஆர்வலர் நந்தினி உட்பட இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details