தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் ஜனவரி மாதம் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள கோயில்கள், மடங்களுக்குச் சொந்தமான 26 யானைகள் பங்கு கொண்டன. அதில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவும் (18) கலந்துகொண்டிருந்தது.
இந்நிலையில், யானை ஜெயமால்யா பாகன்களின் கட்டளையை கேட்காததால் பாகன் வினில்குமார், உதவியாளர் சிவ பிரசாத் ஆகிய இருவரும் குச்சிகளைக் கொண்டு யானை மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலின்போது வலியால் யானை கதறுவதுபோன்ற காணொலிக் காட்சி பிப். 21ஆம் தேதி வெளியாகி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பெண் யானை ஜெய்மால்யாதாவுடன் பாகன் வினில் குமார், உதவியாளர் சிவபிரசாத் இதையடுத்து, யானைப்பாகன் வினில் குமார், உதவியாளர் சிவ பிரசாத் இருவரையும் கோயில் நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்தது. அத்துடன், இருவர் மீதும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், தமிழ்நாடு வளர்ப்பு யானை (மேலாண்மை, பராமரிப்பு) விதிகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கைதுசெய்தனர். பின்னர், நீதிபதி முன் ஆஜர்படுத்தி அவிநாசி கிளைச்சிறையில் இருவரையும் அடைத்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் பிணைக் கோரி மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். நேற்று (மார்ச்2) அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், யானை பாகன் வினில் குமார், உதவியாளர் சிவ பிரசாத் இருவருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கியது.
இதையும் படிங்க :’வெற்றி பெறவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூறுகிறோம்’ - கே.என்.நேரு