கோயம்புத்தூர்: கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 27 ஆம் தேதி இரவு புகுந்த மர்ம நபர் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொள்ளையனைப் பிடிக்க, 5 தனிப்படைகள் அமைத்து கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை மற்றும் நகரில் பொருத்தப்பட்டிருந்த 300 கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பதிவான உருவம் மற்றும் நகைக்கடையில் பதிவான விரல் ரேகையை ஆய்வு செய்து, கொள்ளையடித்த நபர் தருமபுரியை சேர்ந்த 'விஜய்' என்பது தெரியவந்தது.
பின்னர் தனிப்படையினர், தலைமறைவான விஜய்யின் மனைவி நர்மதாவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் வைத்து கைது செய்தனர். விஜய்யின் மாமியார் யோகராணியை தருமபுரி இலங்கை அகதிகள் முகாமில் வைத்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து விஜய் கொள்ளையடித்த தங்க நகைகள் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஜய்யைத் தேடிவந்த தனிப்படையினர், தருமபுரி வனப்பகுதியில் மறைந்திருப்பதை அறிந்து பிடிக்க முயற்சித்தனர்.