சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது வரை 361 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் அரசு மருத்துவமனையில், தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தீவிரக் கண்காணிப்பில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதனிடையே தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவிலும் கரோனா வைரஸ் பரவியதால், தமிழ்நாட்டில் இந்நோய் பரவுவதைத் தடுக்க சுகதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில், தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதியான வாளையாரில் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதாரத் துறை அலுவலர்கள் கேரளாவிலிருந்து கோவை நோக்கிவரும் வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, காய்ச்சல் பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கும்வகையில் இம்முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இந்த முகாமில் பணியமர்த்தப்படிருக்கிறார்கள்.
மேலும் கரோனா தொற்று பரவாமல் இருக்க எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், நாளொன்றுக்கு 15 முறைக்கு மேல் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும்.
காய்ச்சல் சளி ஏற்பட்டால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை பயணிகளுக்கு வழங்கினர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: சீனாவிலிருந்து வந்த திருவாரூர் நபருக்கு கரோனா வைரஸ்...?