கோயம்புத்தூர் துடியலூரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் தனது ஏடிஎம் கார்டு மூலம் ரூ. 21,500ஐ டெபாசிட் செய்ய வந்துள்ளார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தின் கீபேட் சரியாக வேலை செய்யாததை கவனித்த அருகில் இருந்த அடையாளம் தெரியாத நபர், தான் டெபாசிட் செய்து தருவதாக கூறியுள்ளார்.
அந்த நேரத்தில் சந்திரமோகனின் கவனத்தை திசை திருப்பி கண் இமைக்கும் நேரத்தில் பணத்தை வேறு கணக்கில் டெபாசிட் செய்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். பணம் டெபாசிட் செய்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும் குறுந்தகவல் வராததால் சந்தேகமடைந்த சந்திரமோகன், ஏடிஎம் இயந்திரத்தில் இருப்பை சரிபார்த்தபோது, அவரது வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதன் பின், அடையாளம் தெரியாத நபரால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அருகில் இருந்த எஸ்பிஐ வங்கிக்கு சென்ற சந்திரமோகன், நடந்தவற்றை கூறி சிசிடிவி காட்சியை பார்த்து அந்த நபர் டெபாசிட் செய்த வங்கிக் கணக்கை முடக்குமாறு கூறினார். ஆனால், வங்கி அலுவலர்கள் அந்த கணக்கை முடக்குவதற்குள் அதிலிருந்து பணம் எடுக்கப்பட்டதால், துடியலூர் காவல்நிலையத்தில் சந்திரமோகன் புகார் அளித்தார்.