கோயம்புத்தூர்: ஆனைக்கட்டி அருகே உள்ள காப்புக் காட்டில் சமீபத்தில் யானை ஒன்று ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்த சம்பவம், மாநிலத்தில் யானைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மட்டும், மூன்று யானைகள் வெவ்வேறு சம்பவங்களில் உயிர் இழந்துள்ளன.
இச்சம்பவங்கள் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலையைக் கிளப்பியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் காடுகளில் மோசமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதாகக்கூறி வனத்துறையை அலுவலர்கள் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர்.
ஒன்றன்பின் ஒன்றாக பலியான யானைகள்
முன்னதாக கடந்த சனிக்கிழமை நீலகிரி நகரில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் (எம்.டி.ஆர்) கீழ் வரும் தெப்பக்காட்டில் ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றொரு 10 வயது ஆண் யானை காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பின் உயிரிழந்தது. தொடர்ந்து மற்றுமொரு யானை கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 12ஆம் தேதி உயிரிழந்து கிடந்தது.
மனிதர்களின் தாக்குலுக்கு உள்ளாகும் யானைகள்
சமீப காலங்களில் வேட்டையாடுபவர்களிடமிருந்தும், காடுகளுக்கு அருகில் வசிக்கும் மக்களிடமிருந்தும் யானைகள் பெருவாரியாக அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.
ரயில் பாதைகளைக் கடக்க முயற்சித்தும், பல்வேறு மாநிலங்களில் வேட்டையாடுபவர்களாலும் மின்சாரம் செலுத்தியும் யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் யானை ஒன்று முன்னதாக தீக்காயங்களால் பாதிக்கப்பட்டது விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.
மின் வேலியில் சிக்கி உயிரிழந்த யானை இதேபோல், சென்ற மாதம் திருப்பூர் மாவட்டத்தின் வனப்பகுதியின் தடைசெய்யப்பட்ட பகுதியில் மூன்று பழங்குடி இளைஞர்கள் காட்டு யானைகளை கல்லெறிந்து தாக்கினர். முன்னதாக ஜூலை 9ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஒரு முகாமில் 'சேரன்' என்ற யானையை பாகன் ஒருவரும் அவரது உதவியாளரும் கடுமையாகத் தாக்கினர்.
64க்கும் மேற்பட்ட யானைகள் பலி
இது போன்ற தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், ஐக்கிய பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணராஜிடம் இது குறித்து கேட்டறிந்தோம். அப்போது பேசிய அவர், ”மனிதர்களால் யானைகள் சித்திரவதை அனுபவிப்பது மாநிலத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அரசு இதுபோன்ற பல சம்பவங்களைக் கண்டது. 64க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. அவற்றில் 20க்கும் மேற்பட்ட இறப்புகள் கடந்த ஆறு மாதங்களில் நடைபெற்றவை.
வனவிலங்குகளைப் பாதுகாக்க வனத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், வனவிலங்கு இயக்கம் குறித்து விவசாய நிலங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள் மத்தியில் வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடரும் யானை இறப்புகள்
இது குறித்து வனம் அறக்கட்டளை நிறுவனர் வனம் எஸ்.சந்திரசேகரிடம் பேசுகையில், "யானைகளின் இறப்புகளில் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலையில் நிகழ்கின்றன என்பதே உண்மை. மின்சாரம், விஷம், வேட்டையாடுதல் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற பல்வேறு காரணிகளால் யானைகள் உயிரிழக்கின்றன. வனவிலங்குகளைப் பாதுகாக்க களத்தில் இருங்கள் கீழ்நிலை அலுவலர்களை, வனத்துறையில் உள்ள உயர் அலுவலர்கள் கண்காணிக்கத் தவறுகின்றனர் "என்று குற்றம் சாட்டினார்.
மலைப்பகுதி சாலைகளில் வழக்கமான இரு சக்கர வாகன ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மலைப்பாதைகளில் சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மேலும் பழங்குடியின சமூகத்தினரிடமிருந்து மட்டுமே வேட்டையாடுதல் தடுப்பு கண்காணிப்பாளர்களை (Anti-Poaching Watchers) தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றும் அவர் பரிந்துரைத்தார்.
மாநில வனத்துறை அமைச்சர் சொல்வது என்ன?
இது குறித்து மாநில வனத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரனை நமது ஈடிவி பாரத் தொடர்பு கொண்டபோது, வனவிலங்குகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை அவர் உறுதி செய்தார்.
"பெரும்பாலான யானைகள் வயது காரணி அல்லது தொற்று காரணமாக உயிரிழக்கின்றன. மேலும், வேட்டையாடுபவர்கள் குறித்து விழிப்புடன் இருக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காடுகளுக்கு அருகில் வசிக்கும் மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்" என்றார்.
மாநில வனத்துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2018ஆம் ஆண்டில் மொத்தம் 84 யானைகள் உயிரிழந்துள்ளன. 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 108ஆக உயர்ந்தது. 2001-2015 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 113 யானைகள் உயிரிழந்துள்ளதாக இந்தத் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரசுக்கு அனைத்துவிதத்திலும் அறிக்கை உதவியாக இருக்கும் - ஏ.கே. ராஜன்