கோவை மாவட்டம், மருதமலை வனப்பகுதியில் விலைமதிப்பற்ற ஏராளமான தாவர மற்றும் மர வகைகள் உள்ளன. குறிப்பாக அடிவாரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தேக்கு, சந்தனம் உள்ளிட்ட அதிக விலை மதிப்புள்ள மரங்கள் வனத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான வன குடியிருப்பு வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் இருபது வயது உடைய மூன்று சந்தன மரங்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கடத்தப்பட்டு உள்ளன. இது குறித்து வன ஊழியர்கள், உடனடியாக உயர் அலுவலர்களுக்கும் வடவள்ளி காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் வன ஊழியர்கள் எப்போதும் தங்கியிருப்பர். இரவு நேரத்தில் மட்டும் அவர்கள் யானைகளை விரட்ட காட்டுக்குள் செல்கின்றனர்.
இதனையறிந்த, நபர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதேபோல யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கடத்தல்காரர்கள் வெளியேறி இருப்பதால், அவர்கள் உள்ளூர் ஆட்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாத நபர்கள் இந்த சந்தன மரங்களை குறி வைத்து வெட்டி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாக, ஆர்.எஸ்.புரம், சாய் பாபா காலனி, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன.