கோவை அடுத்த ஆலாந்துறை பகுதி மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இங்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்துவருகிறது. இந்நிலையில் கிராமத்திற்கு அருகில் குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுவரும் 600 வீடுகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியமர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் கூடுதலாக மக்கள் குடியமர்த்தப்பட்டால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் தங்களுடன் சேர்த்து புதிதாக குடியமர்த்தப்படும் மக்களும் யானை தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும் என்று கூறி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இதையடுத்து வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் லோகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வன எல்லையை ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் நடைபெற்றுவருவதாகவும், இதன் காரணமாக அதிகளவில் மனிதர்கள் விலங்குகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு பின், அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்தால் யானைகள் வழித்தடம் பாதிக்கப்படும், வன விலங்குகள் பாதிக்கும் நிலை உள்ளது என்று கூறி புதிய கட்டுமான பணிகளுக்கு தடைவிதிப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
உயர் நீதிமன்றத் தடையை மீறி அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுமானம் இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி காளிமங்கலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் பணி இரவு பகலாக நடைபெற்றுவருகிறது. இது குறித்து புகார் தெரிவித்த அப்பகுதி மக்கள், உயர் நீதிமன்றத் தடையை மீறி இந்தப் பணிகளை தனியார் நிறுவனம் செய்துவருவதாகவும், உடனடியாக கட்டுமான பணிகளை தடுத்துநிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.