கோயம்புத்தூர் மத்திய சிறையில் உணவுப் பொருள்கள் வழங்குவதில் சிறைத் துறை அலுவலர்கள் முறைகேடு செய்வதாகவும் இது குறித்து உயர் அலுவலர்களுக்குப் புகார் அளித்தால் தன்னை துன்புறுத்துவதாகவும் சிறையில் சமையலாளராக இருந்த வேலுச்சாமி (சஸ்பெண்ட்டில் உள்ளார்) புகார் அளித்துள்ளார்.
சிறைத்துறை சமையல்காரர் புகார் இது குறித்து கோயம்புத்தூர் மத்திய சிறை முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2016ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக இருந்த முருகேசன், சிறைவாசிகளுக்கு ரேஷன் பொருள்களைச் சரியாகத் தராததால் ஐஜியிடம் புகார் அளித்தேன்.
அதன் விளைவாக என்னை சிறைவாசியிடம் பணம் பெற்றதாக கூறி இடைநீக்கம் செய்தனர். இதற்கான விசாரணை நடைபெறாத நிலையில், சிறைச்சாலை குடியிருப்பில் வசிக்கும் என்னை வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்துகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக தற்பொழுது உள்ள எஸ்.பி. கிருஷ்ணராஜ் கூறும்பொழுது, "வேலுச்சாமி பணிக்கு வர ஆணை பிறப்பித்தும் பணிக்கு வரவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. சிறைச்சாலை குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்து கடந்த நான்கு வருடமாக மின்சாரம், குடிநீர் கட்டணம் எதுவும் கட்டவில்லை" என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.