கோவை:தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூரை அடுத்த நீலாம்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உயர் ரக வெளிநாட்டு போதைப் பொருள்களை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் நீலாம்பூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது உடைமைகளை சோதித்தபோது, அதில் சந்தேகத்துக்கிடமான வகையில் வெள்ளை நிற பொட்டலம் ஒன்று இருந்துள்ளது.
இதனை அடுத்து போலீசார் சந்தேகத்துக்கிடமான அந்த பொட்டலம் குறித்து இளைஞர்களிடம் கேட்டபோது பதில் அளிக்காமல் இருந்திள்ளனர். இதனை தொடர்ந்து உடனடியாக அந்த இளைஞர்கள் இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் இளைஞர்கள் இருவரும் கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியை சேர்ந்த நந்த கிருஷ்ணா மற்றும் வருண் என்பதும், நவ இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது.