பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் நந்தகுமார் (வயது 22), இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.
நந்தகுமாருக்கும் அவருடன் படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் நந்தகுமார் தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். மேலும் தனக்கும் மாணவிக்கும் உடனடியாக திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். அதற்கு அவரது பெற்றோர்கள் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாகக் கூறினர்.
இதனால் கடந்த சில நாள்களாக நந்தகுமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்றிரவு வீட்டிலிருந்த அவர், வாழ்க்கையில் விரக்தி அடைந்து அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைப் பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, தற்கொலை செய்துகொண்ட நந்தகுமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.