கரோனா ஊரடங்கினால் பலரது வாழ்வாதாரம் முடங்கிய நிலையில் சாலையோரம் ஆதரவற்றோரின் நிலை காண்போரை வருத்தத்திற்குள்ளாக்குகிறது. அவர்களுக்குத் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், நிறுவனங்கள் போன்றோர் உணவளித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கல்லூரி முடித்த இளைஞர்கள் தற்போதுள்ள ’பேடிஎம், ஃபோன்பே, கூகுள் பே, யுபிஐ ஐடி’ (Paytm, Phone pe, Google pay, UPI Id) போன்ற நவீன வசதிகளைப் பயன்படுத்தி நிதி திரட்டி சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு, தண்ணீர் பாட்டில், முகக்கவசம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
ஒரு நபருக்கு ஒரு வேலை உணவு, குடிநீர் பாட்டில், முகக்கவசத்திற்கு ரூ 33 என்ற வீதம் கொடுத்து வருகின்றனர். ஊடரங்கு பிறப்பித்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை இதனைத் தொடர்ந்து செய்வோம் என்ற இவர்களது முயற்சிக்கு பெரும் ஆதரவும் பாராட்டுதலும் கிடைத்துள்ளது. தற்போது ஒரு நாளுக்கு ஒரு வேளை உணவளிக்க மட்டுமே பணம் சேரும் நிலையில் மேலும் தொகை கிடைத்தால் பேருதவியாக இருக்கும் என்றும் மூன்று வேளைகள்கூட உணவளிக்கத் தயாராக இருக்கின்றோம் என்றும் கூறியுள்ளனர். அதே சமயம் தங்களுக்கு உதவி செய்ய ஆட்கள் தேவைப்படுவதாகவும் யாரேனும் இருந்தால் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.