கோயம்புத்தூர்:கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா கோவை ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கோவையில் இருந்து காலை 5:20 மணிக்குப் புறப்படும் இந்த முன்பதிவில்லா விரைவு ரயில் (06421) போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு காலை 6:25 மணிக்கு சென்றடையும். அதேபோல் மறுமார்கமாக பொள்ளாச்சியில் இருந்து இரவு 8:55 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (06422) கிணத்துக்கடவு, போத்தனூர் வழியாக கோவைக்கு இரவு 10:15 மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று துவங்கப்பட்ட இந்த ரயில் நாளை (டிச.24) முதல் வாரத்தின் ஏழு நாட்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிகழ்வில் சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்கா, உதவி மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், “கோவை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக கோவை - பொள்ளாச்சி அல்லது பொள்ளாச்சி வரையிலான மின் மயமாக்கப்பட்ட பிறகு ராமேஸ்வரம், தென்காசி ஆகிய ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது சேலம் கோட்டத்தில் கோவை, பொள்ளாச்சி இடையிலான இந்த ரயிலை இயக்குவது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் அதனை வரவேற்கிறேன் எனவும் தெரிவித்தார். மேலும், பொள்ளாச்சி முதல் மேட்டுப்பாளையம் வரை மெமோ ரயில் இயக்குவதற்கான வாய்ப்பு இருக்கின்ற நிலையில் அதனை ரயில்வே நிர்வாகம் கவனிக்க வேண்டும் என தெரிவித்தார்.