கோயம்புத்தூர்:நாடு முழுவதும் பொதுமக்களின் பயணத்தை எளிமையாக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவையானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவையில் இருந்து பெங்களுரூ வரை செல்லும் 8 ரயில் பெட்டிகள் கொண்ட கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை, அயோத்தியில் இருந்து இன்று (டிச.30) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இதனை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை எம்.பி நடராஜன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த வந்தே பரத் ரயிலில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகள் சென்றனர். இந்நிலையில், இந்த ரயில் சேவை ஜனவரி 1ஆம் தேதி முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வந்தே பாரத ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர், பெங்களூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.