கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் சாலை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதி சென்ட்ரல் நகர் பகுதியைச் சேர்ந்தவர், சிவக்குமார். இவரது மகன் ஜீவ்நாத். ஜீவ்நாத் கடந்தாண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பிற்காக சென்று இருந்தார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை (ஜூன் 21ஆம் தேதி) அன்று, உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.30 மணியளவில், செல்லி ஓக், மேட்ரான்ஸ் வாக் என்ற இடத்தில் உள்ள வொர்செஸ்டர் மற்றும் பர்மிங்காம் கால்வாயில் இருந்து ஆபத்தான நிலையில் காவல்துறை அதிகாரிகளால் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.
அதிகாலை 4.46 மணி அளவில், பர்மிங்காம் கால்வாயில், ஒருவரது உடல் இருப்பதாக, வெஸ்ட் மிட்லாண்ட் ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. கால்வாயில் இருந்து, அந்த உடலை மீட்ட மருத்துவக் குழுவினர், அதற்குத் தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சைகளை அளித்தனர். இருந்தபோதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல், அவர் இறந்து விட்டதாக, மருத்துவக் குழு தெரிவித்து உள்ளது.
ஜீவ்நாத், கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் (2015 முதல் 2019 வரை) B.E., படித்து இருந்தார். 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அவர் முதன்முறையாக, இங்கிலாந்து வந்து இருந்தார். அவர், பர்மிங்காமில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு கால அளவிலான சர்வதேச வணிகத்தில் எம்.எஸ்.சி படித்துக் கொண்டிருந்தார்.
மேலும் ஜீவ்நாத் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து இன்னும் முறையான தகவல் லண்டன் போலீசார் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மாணவர் ஜீவ்நாத் குளிக்கச்சென்றபோது விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என எந்தத் தகவலும் முறையாக வரவில்லை என்று ஜீவ்நாத்தின் சகோதரர் ரோஹன் தெரிவித்து உள்ளார்.