கோயம்புத்தூர்:ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளரான ஆசிப் முஸ்தஹீன் உபா (Unlawful Activities (Prevention) Act - UAPA) சட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடி வரையப்பட்டிருந்த பேப்பரை சிறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், அவர் சிறை அதிகாரிகளை மிரட்டியதாக ஜெயிலர் சிவராஜன் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அவர் மீதான விசாரணையைத் தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்ற வேண்டுமென, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வானதி சீனிவாசன் அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "கோயம்புத்தூர் மாநகரம் தொடர் குண்டுவெடிப்பு, கலவரங்கள் என 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பயங்கரவாதிகளின் இலக்காக இருந்துவருகிறது. தற்போது கோவை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன், சிறையிலிருந்து வெளியேறுவேன். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்காகத் தீவிரவாத வேலைகளைத் தொடர்வேன். அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள், சிறைச்சாலையும் இருக்காது என மிரட்டல் விடுத்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.