கோயம்புத்தூர்:கோவை ராமநாதபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர், பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை பாஜக நிர்வாகிகளோடு அவர் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், "கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து வாகனங்கள் வாயிலாக பல்வேறு அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மக்கள் தங்களது குறைகளை நேரடியாக கூறும் வகையில் பாஜகவின் மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் நல்லாட்சியில் மக்களுக்கான சிறப்பான திட்டங்கள் எந்தவித இடைத்தரகர்களும் இல்லாமல் நேரடியாக கோடிக்கணக்கான பயனாளிகளை சென்றடைந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக மாநில தலைவரின் 'என் மண், என் மக்கள்' யாத்திரைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்லும் இடமெல்லாம் ஆதரவு தந்து வருகின்றனர். இதுபோன்று பல்வேறு வகையிலும் பாரதிய ஜனதா கட்சி சிறப்பாக வளர்ந்து வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி உருவாக்கப்பட்டு மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்லும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். பருவமலை காலங்களில் மழைநீர் தேங்காாமல் இருக்க உள்ளாட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும். அந்த வகையில் எனது கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட லங்கா கார்னர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கும் பிரச்சனை தொடர்ச்சியாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது.
தமிழகத்தில் அமைச்சர்கள் தங்கள் மீது எப்போது ரெய்டு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால், அரசாங்கத்தின் பணிகளில் அவர்களது கவனம் இல்லை. ஒவ்வொரு நாளும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளால் ஏராளமான மக்கள் பாதித்து வருகின்றனர். காய்ச்சல் முகாம்கள் குறித்து சரியான தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை. குப்பை தேங்குவது மற்றும் கொசு தொல்லை அதிகமாகி வருகிறது. எனவே, குப்பை மற்றும் மழை நீர் தேங்குவதை தடுத்து நிறுத்தினால் மட்டுமே காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். உள்ளாட்சி நிர்வாகத்தின் பணிகளை தீவிரப்படுத்தி காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.