தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2) முடிந்த நிலையில், கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தெற்கு தொகுதியில் எண்ணப்பட்ட 100 வாக்கு இயந்திரங்களில் மீண்டும் எண்ண வேண்டும் என கோரி அத்தொகுதியில் போட்டியிட்ட ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளர் ராகுல் காந்தி கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான நாகராஜிடம் மனு அளித்தார்.
இது குறித்து பேசிய அவர், 'ஆரம்பத்தில் இருந்த கோவை தெற்கு தொகுதியில் ஒற்றை இலக்க வாக்குகளை மட்டும் பெற்று வந்த பாஜக வேட்பாளர் திடீரென வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏதாவது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாஜக வெற்றி பெற்றிருக்குமோ, என்ற ஐயம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கேரளா வயநாட்டில் நான் போட்டியிட்டபோது 800 வாக்குகளை பெற்று இருந்தேன். ஆனால் சொந்த ஊர் கோவையில் போட்டியிடும்போது வெறும் 72 வாக்குகள் மட்டுமே பெற்றதாக காட்டுகிறது. இதனால்தான் சந்தேகம் எழுந்துள்ளது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாஜக வெற்றி பெற்றதா? என்பதை கண்டறிய வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப பரிசோதனை செய்ய வேண்டும். அதுவரை கோவை தெற்கு தொகுதியில் வெற்றி அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்' என தெரிவித்தார்.