கோயம்புத்தூர்: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கோயில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பாஜக சார்பில் டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோயிலில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
இதில் கலந்து கொண்ட கோவை தெற்கு தொகுதி சட்டபேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கோயில் தூய்மை பணியில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அதற்கான அட்சதை, அழைப்பிதழ்கள் கோடிக்கணக்கான வீடுகளுக்கு சென்று வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றை ராமர் வந்ததை போல மக்கள் பக்தி பரவசத்துடன் பெற்று கொண்டு, ராமர் கோயிலுக்கு வர சங்கல்பம் எடுத்துள்ளனர். நாடு முழுவதும் கோயில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.
பாகுபாடு இல்லாமல் அத்தனை ஆலயங்களிலும் தூய்மை பணிகள் நடைபெறுகின்றன. வரும் 22ஆம் தேதி மக்கள் திரளாக கூடி ராமர் கீர்த்தனைகளை பாடி, கும்பாபிஷேகத்தை காணொலி வாயிலாக பார்க்க உள்ளனர். கும்பாபிஷேக நாளன்று வீடுகளில் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் விழா போல கொண்டாட உள்ளனர். நாடு முழுவதும் ஆன்மிக பேரலை எழுந்துள்ளது. அடிமை சின்னத்தை மாற்றி கலாச்சார நாயகனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கும் பொன்நாள் பாரத வரலாற்றின் திருநாள். அதனை நாடு கொண்டாட தயாராகி வருகிறது.
மசூதி, கோயிலை இடித்து தான் கட்டப்பட்டு இருந்தது. நியாயப்படி அந்த இடத்தை உரிமையாளரிடம் தான் ஒப்படைக்க வேண்டும். முதலமைச்சர் ராமர் கோயில் அழைப்பிதழை நேரில் வாங்கவில்லை. ஆனால் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அழைப்பிதழை வாங்கி, அயோத்திக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார். தகப்பனார் அரசியல் வேறு. மனைவி அரசியல் வேறு. மகன் அரசியல் வேறு என வேறு வேறு அரசியல் வழியில் செல்கின்றனர்.