விண்ணில் பாய்ந்த விண்கலத்தை கண்டு ரசித்த பள்ளி மாணவர்கள் கோயம்புத்தூர்:சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று (ஜூலை 14) மதியம் ஏவப்பட்டது. ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதி சந்திரயான் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான், பூமியில் இருந்து நிலவை நோக்கி பாய்ந்த இந்த விண்கலம் நீள்வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து சென்ற எல்.வி.எம் 3 ராக்கெட் எம்4 S200 திட பூஸ்டர்கள் ராக்கெட்டில் இருந்து தனித்தனியாக பிரிந்து சென்றுள்ளன.
இந்த நிலையில், சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாக உலக நாடுகள் எல்லாம் திரும்பி பார்க்கும் இந்த சந்திரயான்-3 விண்கலம் புவி நீள்வட்டப்பாதையில் செலுத்தப்பட்ட நிலையில், அதன் இயக்கம் திருப்தியாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன்-3 விண்ணில் பாய்ந்ததை ஆயிரக்கணக்கானோர் கண்டு ஆராவாரம் செய்தனர்.
குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இதனை நேரில் கண்டு மகிழ்ந்தனர். மேலும், சந்திராயன் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள். ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-3 விண்ணில் பாய்ந்த நிகழ்வை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மசக்காளிபாளையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீரணத்தம் பள்ளி மாணவர்கள் நேரில் கண்டு களித்தனர்.
மேலும் அங்கே உள்ள காட்சியகத்தில் (Gallery) பார்வைக்கு வைக்கபட்டிருந்த இஸ்ரோவின் ராக்கெட், செயற்கைக்கோள் மாதிரிகள், உதிரி பாகங்கள் ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ந்தனர். நாடு முழுவதிலும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பார்வையிட்ட நிகழ்வில் இவர்களும் பங்கேற்று பயன்பெற்றனர். மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் வானியல் பற்றிய ஏராளமான அனுபவத்தைப் பெற்றுத் தந்தது இந்தப் பயணம் எனவும், அறிவியல் ஆராய்ச்சி குறித்து தாங்கள் தெரிந்துகொள்ள முக்கிய நிகழ்வாக இது அமைந்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:Chandrayaan 3: நிலவை ஆராயும் சந்திரயான்-3.. புவி நீள்வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!