கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள பூங்காவில் கடந்த மாதம் 26ஆம் தேதி 11ஆம் வகுப்பு மாணவி, தனது ஆண் நண்பருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்றிருந்தார். அப்போது, அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் மாணவியின் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்தனர்.
மேலும் அதை செல்போனில் வீடியோவாக பதிவுசெய்து மாணவியை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வழக்கில் தொடர்புடைய ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி, மணிகண்டன், பப்ஸ் கார்த்திக் ஆகிய ஆறு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆறுபேர் மீதும் கோவை மாநகர காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில், சிறையில் இருப்பவர்களில் ஒருவரான மணிகண்டன் என்பவர் காவல் துறையில் சரணடைவதற்கு முன்னர் செல்போனில் பதிவுசெய்து வைத்திருந்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.