மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை கண்டித்து, டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேசி தீர்வு காணும் வரை தொடர் போராட்டம் நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 5ஆம் தேதியன்று பொள்ளாச்சி, டிசம்பர் 7ஆம் தேதி அன்னூர், டிசம்பர் 8ஆம் தேதி கோவை காந்திபுரம் மற்றும் மேட்டுப்பாளையம், டிசம்பர் 9ஆம் தேதி சூலூர் பாப்பம்பட்டி பிரிவு மற்றும் சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் மறியல் போராட்டம் நடத்திட முடிவு செய்துள்ளனர்.