கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் உக்கடம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்புப் பயின்றுவந்த மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் (நவ. 11) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
விசாரணையில், அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் தொடர் பாலியல் துன்புறுத்தலே தங்களது மகளின் தற்கொலைக்குக் காரணம் என மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இத்துடன் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிவைத்த கடிதத்தில் மூவரின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த மாணவி ஆசிரியரால் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாகியதாகவும் பள்ளி நிர்வாகத்திடம் இதனைப் பற்றி புகார் தெரிவித்தும்கூட அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நவம்பர் 12 ஆசிரியர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ சட்டத்தில் இரண்டு பிரிவுகள் என மொத்தம் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து பின்னர் சிறையில் அடைத்தனர்.