கோயம்புத்தூர்: மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது. இந்த சூழலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மீட்புப் படையினர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், சென்னையில் மிக்ஜாம் புயல் சீரமைப்புப் பணிகளைத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்புக்குழு, தன்னார்வலர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோர் இணைந்து மக்களை மீட்டு வருகின்றனர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.