உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்திருந்தாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு புத்தாண்டை வரவேற்றனர்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை மாநில அரசு தடை செய்தது. மேலும், பொது இடங்களில் பொதுமக்கள் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது.
இதனால், ஓட்டல்களிலும், பொது இடங்களிலும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன. புத்தாண்டையொட்டி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து அலுவலர்களுடன் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.