கோயம்புத்தூர் மாநகரில் கடந்த சில நாட்களாக தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நகை பறிப்பு திருடர்களைப் பிடிக்க உத்தரவிட்டார். உதவி ஆணையர் ரவி தலைமையில், காவல் ஆய்வாளர் கண்ணையன், மற்றும் உதவி ஆய்வாளர் மாரிமுத்து, உமா, காவலர்கள் கார்த்தி, பூபதி, முத்துராமலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் மாநகரில் பல்வேறு இடங்களில் சாதாரண உடையில் ரோந்து சென்று கண்காணித்து வந்தனர். அப்போது டவுன் ஹாலில், 3 பெண்கள் அவசர அவசரமாக ஓடிச்சென்று ஆட்டோவில் ஏறி செல்வதை போலீசார் பார்த்தனர். அந்த ஆட்டோ போக்குவரத்து நெரிசலுக்கு இடையே சென்றதால் அவர்களால் உடனே பிடிக்க முடியவில்லை. பின் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அந்த ஆட்டோவின் எண்ணை கைப்பற்றினர். ஆட்டோவின் விவரங்களை சேகரித்து ஓட்டுநரிடம் விசாரித்தனர்.
அதில் மூன்று பெண்களை அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டதாகவும், 100 ரூபாய் வாடகைக்கு, 200 ரூபாய் தந்ததாகவும் ஓட்டுநர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிறுத்தத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் அந்த பெண்கள் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒரு பையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததும், அங்கு ஒரு இளைஞரிடம் போனை வாங்கி பேசிய பின்னர் பேருந்தில் ஏறிச் சென்றதும் பதிவாகி இருந்தது.
பின் போலீசார் அந்தப் பெண்களிடம் போனை கொடுத்த நபரை கேமராவில் கண்காணித்தனர். அதில் அவர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் உள்ள ஒரு பெண்ணிடம், 15 நிமிடங்கள் பேசிச் சென்றது பதிவாகி இருந்தது. போலீசார் அந்த இளைஞரின் போட்டோவை எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனையில் உள்ள, 4 வார்டிலும் சென்று விசாரித்தபோது அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த ஒரு பெண்ணின் உறவினர் என்பதும், அவர் திருப்பூரில் வசித்து வருவதும் தெரியவந்தது.
அவரின் முகவரியை பெற்றுக்கொண்டு போலீசார் திருப்பூர் விரைந்தனர். அங்கு அந்த இளைஞரிடம் விசாரித்து அவரது போன் மூலம் அந்த பெண்கள் பேசிய எண்ணை கைப்பற்றினர். அந்த போன் எண்ணில் உள்ள இடத்தைப் பார்த்த போது, அது மேட்டுப்பாளையத்தில் உள்ள சொகுசு விடுதியை காட்டியது. போலீசார் அங்கு சென்ற போது அந்த நபர் விடுதியை காலி செய்து சென்று விட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பின் அந்த போன் எண் யாருடையது என்ற விவரத்தை சேகரித்து, தொடர்ந்து அந்த போன் எண்ணை டிராக் செய்த போது அந்த செல்போன் பெங்களூரில் இருப்பதாக காட்டியது. பெங்களூர் செல்ல திட்டமிட்ட போது அந்த போன் எண் சென்னைக்கு திரும்பியது. சென்னையில் தொடர்ந்து போன் எண் இருந்ததால் தனிப்படை போலீசார் ஜேப்படி கும்பலை பிடிக்க சென்னைக்கு போலீஸ் வேனில் விரைந்தனர். அப்போது போலீஸ் வேன் சேலம் அருகே சென்றபோது விபத்துக்குள்ளாகி போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.