கோயம்புத்தூர்:கர்நாடகா மாநிலம், பெங்களூரு மகுடி சாலை காசோலி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர், முகமது சாஸாத். இவர் பழைய இரும்பு மற்றும் மின்னணு கழிவுப் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முகமது சாஸாத் தனது காரில் ஓட்டுநர் முகமது யாசீன், மகன் சையப் (14) உள்ளிட்டோருடன் கோவை சரவணம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, காரில் பின் தொடர்ந்து வந்த கும்பல் அவர்களை இடைமறித்து மூவரையும் கடத்திச்சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 15) காலை கோவில்பாளையம் காவல்துறையினர் அத்திப்பாளையம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இரு காரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.