மூலப்பொருள்களின் கடும் விலை உயர்வால் தொழில் நடத்த முடியாத நிலைக்கு சிறு, குறு தொழில்கள் தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக கோயம்புத்தூரில் தொழில்முனைவோர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து கடந்த நான்கு நாள்களாக 400-க்கும் மேற்பட்ட ஆலைகள் முழுமையாக மூடப்பட்டு இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் பணியாற்றுகிற சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத்திய, மாநில அரசுகள் வேலைநிறுத்தம் குறித்து கவலைப்படாதது அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. தொழில் நடத்த முடியாத நெருக்கடியில் தள்ளப்பட்டு வேறு வழியின்றி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது கண்கூடாகத் தெரிகிறது. வார்ப்பட (பட்டறை) தொழில் சார்ந்த மூலப்பொருள்கள் விலை 30 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
அனைத்து தொழில்களுக்குமே பாதிப்பு
ஏற்கனவே ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டி ஐந்து விழுக்காடாக குறைக்க வேண்டும் என்கிற முக்கியமான கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில் இந்த மூலப்பொருள்களின் கட்டுப்பாடற்ற விலை உயர்வு வார்ப்பட தொழிலை மட்டுமல்லாது இதனைச் சார்ந்த அனைத்து தொழில்களுக்குமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நெருக்கடியை எதிர்கொண்டு வார்ப்பட தொழில்முனைவோர் விலை உயர்வை அறிவித்து பொருள்களை உற்பத்திசெய்து சந்தைக்கு வந்தால் அது நேரிடையாக நுகர்வோராகிய பொதுமக்களைக் கடுமையாக பாதிக்கும். தங்கம் விலை போன்று அன்றாடம் மூலப்பொருள்களின் விலை உயர்கிறது.
திட்டமிட்டே மூலப்பொருள்கள் பதுக்கல்
இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நூறு விழுக்காடு நியாயமான கோரிக்கையாகும். மேலும் திட்டமிட்டே மூலப்பொருள்களைப் பதுக்கிவைத்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தி செயற்கையாக விலையேற்றம் செய்யப்படுகிறதோ என்கிற இவர்களின் அச்சத்தையும் புறந்தள்ள முடியாது.
ஏன் விலை ஏற்றம் என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தொழில்முனைவோர்கள் எழுப்பும் கேள்விக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளன.