கோவை:தென்னக ரயில்வே உதகமண்டலத்தில் சிறப்பு இரயில் ஒன்றிற்கு அனுமதி அளித்துள்ளது. அந்த ரயிலில், குறைந்த பட்ச கட்டணமாக 3ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய எஸ்ஆர்எம்யூ(SRMU) கோட்ட செயலாளர் கோவிந்தன், " ஊட்சி மலை ரயில் தனியாருக்கு கொடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. 109 வழித்தடங்களில் 251 ரயில்களை தனியாருக்கு கொடுக்கவேண்டும் என அரசாங்கம் முயற்சித்துவருகிறது. இதன் முதல்கட்டமாக ஊட்டி ரயிலை கொடுத்திருப்பது தெரிகிறது.
இதற்கு முன்பு அந்த ரயில் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அதிகபட்ச கட்டணமே 500ரூபாய்தான் இருந்தது. ஆனால், தற்போது குறைந்த பட்ச கட்டணமாக 3ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, வெளிநாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஊட்டிக்கு மக்கள் அதிகம் செல்லாத இந்தக் காலத்திலே ரயில் கட்டணம் 3ஆயிரமாக இருக்கும்போது, சீசன் காலங்களில் 8 அல்லது 10ஆயிரம் ரூபாய் வரை உயர்த்துவதற்கான வாய்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது" என்றார்.
இதுதொடர்பாக பேசிய கோவை மக்களவை உறுப்பினர் ஆர். நடராஜன், "தமிழ்நாட்டில் மிக முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கும் உதகமண்டலத்தின் மலை ரயில் என்பது நூற்றாண்டு காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ரயில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மலை ரயில். இதனைப் பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு அந்த ரயிலை தனியாருக்கு தாரைவார்ப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.