ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில் ஒழிவு மறைவற்ற விசாரணை நடப்பதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தகவல் கோயம்புத்தூர்: சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று (ஜூன் 5) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், '48 கோடி மக்களுக்கும் மேலாக முதல்முறையாக பாஜக ஆட்சியில் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு ரூபாய் என்றாலும் அதை ஏழைகளுக்கு சென்றடைய வங்கி கணக்குகள் செயல்படுகிறது என்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வரம்பு அதிகரிப்பு:முத்ரா வங்கி திட்டத்தில், 68 சதவீதம் பெண்கள் பயனாளிகளாக உள்ளனர். இந்திய நாட்டுப் பெண்களுக்கு இரத்த சோகை அதிகம் என குறிப்பிட்ட அவர், சத்து குறைபாடு காரணமாக அதிகமாக பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றார். இந்த நிலையில் கர்ப்பிணி கால பராமரிப்பு, பாலூட்டும் நிலை, இளம் சிறார்களுக்கு சுகாதார திட்டங்கள் ஆகியவை மத்திய அரசு கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு உதவி செய்ததின் வாயிலாக, மீண்டும் தொழில் செய்ய உதவி கொடுத்ததோடு, ஏழு குறைபாடுகள் இருந்தால் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் என்பதை 21 குறைபாடுகளாக மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். இதற்காக 1400 முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், இதன் மூலம் 25 லட்சம் பேர் இதுவரை பயனடைந்துள்ளதாக அவர் கூறினார்.
மண்வள அட்டைகள்:விவசாயிகள் ஆன்லைன் திட்டத்தில் விற்பனை செய்ய மாநில அரசாங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தான் ஏற்கனவே, சட்டப்பேரவையில் பேசிய நிலையில், இதற்கான முயற்சிகள் செய்வதாக அவர் தெரிவித்தார். 23 கோடி மண்வள அட்டைகள் வழங்கியதன் மூலம் விவசாயிகளுக்கு உதவியாக உள்ளதாகவும், புதிய கல்விக் கொள்கையில் இளைஞர்களுக்கு மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறப்பாக செயல்பட்ட 'ஆப்ரேசன் கங்கா':இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்கு வேண்டி தனி இலாகாவை உருவாக்கியது மத்திய அரசு எனவும், கிராமப்புறம் நகர்ப்புற வீடுகள் என 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்றார். கரோனா காலத்தில் சிறப்பாக உலக அளவில் செயல்பட்டதற்கான நாட்டில் இந்தியாவிற்கு பெருமை கிடைத்தது. வெளிநாடுகளில் மாட்டி தவித்த இந்தியர்களுக்கு ஆபரேஷன் கங்கா, காவேரி போன்ற திட்டத்தின் மூலம் அழைத்து வந்தது. எந்த நாடுகளாலும் கையாள முடியாததை இந்திய வெளியுறவுத்துறை கொள்கை மூலம் கையாண்டுள்ளது என்றார்.
டிஜிட்டல் பயன்பாட்டில் 35%முன்னேற்றம்: ஐந்தாவது பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடாக இந்தியா மாறி கொண்டுள்ளது என தெரிவித்த அவர், இதற்கு காரணமாக ஜிஎஸ்டி (GST) அறிமுகப்படுத்தப்பட்டதை கூறலாம் என்றார். ஜிஎஸ்டி தொடர்பான, பிரச்னைகள் மாறியதோடு, டிஜிட்டல் பரிவர்த்தனை எளிமையாக உள்ளதாகவும் கூறினார். இதனால், உலக அளவில் இந்தியாவில் 40% டிஜிட்டல் பயன்பாடு ஏற்பட்டு ஏற்றுமதி 35 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
நாடெங்கும் 23 எய்ம்ஸ்:மருத்துவ உள்கட்டமைப்பு வசதியைப் பொறுத்தவரையில், 23 எய்ம்ஸ் ஆக அதிகரித்தாகவும், ஒன்பது ஆண்டு கால ஆட்சி நிறைவு என்பது இந்தியாவைப் பற்றிய பார்வை பிரதமருக்கு உலக அளவில் கிடைத்துள்ள பெருமை என்று அவரை வாழ்த்தினார். இதன் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதாகவும், பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியது என்றார்.
ஒடிசா ரயில் விபத்து; ஒளிவு மறைவற்ற விசாரணை:ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வில்லை என திமுக எம்.பி. ஆ.ராசா விமர்சித்திருப்பதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசு இந்த ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில், யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை எனவும், எதையும் மூடி மறைக்கவில்லை எனவும், மக்களிடம் எதையும் மறைக்கவும் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இது குறித்து பேசுவதற்கு முன்னதாகவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றார். இந்த விபத்தின் பின்னணியில் மத்திய ரயில்வே அமைச்சகமும் சரி, மத்திய அரசும் சரி ஒருபோதும் யாரையும் பாஜக அரசு காப்பாற்ற நினைக்காது என்று பதிலளித்தார்.
மேகதாது அணை விவகாரம்:கர்நாடகா வெற்றியை வைத்துக்கொண்டு ராகுல் காந்தி பாஜகவை வீழ்த்திவிடலாம் என்றால், அந்த கனவு பலிக்காது என்றும் ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து பேசுவது நாட்டின் மரியாதைக்கு எதிரானது என்றும் அவரை சாடினார். மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் திமுக தமிழகத்தின் நலனைக் காப்பாற்ற போகிறார்களா? என்பதை வரக்கூடிய காலத்தில் பார்ப்போம் என்றார். தமிழகத்திற்கு அதிக முதலீடு வந்தால் பாஜக ஆதரிக்கும். ஆனால், துபாய் சென்றுவிட்டு சொன்ன முதலீடுகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் கேள்வியெழுப்பினார்.
விளம்பர பலகைகள் குறித்த சட்டம் ஏற்கனவே, தமிழ்நாட்டில் கொண்டு வந்த நிலையில், புதிதாக திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு விளம்பரப் பலகைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். இவ்வாறு விளம்பர பலகை வைக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் சம்பவம் நடக்கும்போது மட்டும் மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த விளம்பர பலகை விவகாரத்தில் குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதாக உள்ளதாக' அவர் சாடினார். முன்னதாக பாஜக அலுவலகம் முன்பு ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர், பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்க காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: "இந்தியாவில் இரண்டே சித்தாந்தம் தான்... ஒன்று மகாத்மா காந்தி.. மற்றொன்று கோட்சே.." - ராகுல் காந்தி!