கோயம்புத்தூர்:காலை முதல் மாலை வரை மில்லில் அயராது பணி. மாலைக்கு மேல் தினமும் இரண்டு மணி நேரம் கல்லூரி படிப்பு. இப்படியாக தான் நகர்ந்து வருகிறது கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மில். இங்கு தங்களது குடும்பத்தின் நிதிச் சுமையைப் போக்க பள்ளிப் படிப்பிற்குப் பின் பலரும் இந்த கோவையில் உள்ள பிரபல மில்லில் பணிக்கு சேர்ந்துள்ளனர்.
21 ஆம் நூற்றாண்டிலும் நமது குழந்தைகளுக்கு கல்வி இல்லையென்றால் என்ன ஆகும் இந்த சமூகம் என்று நினைத்த இந்நிறுவனம், பணிபுரியும் மாணவப்பருவ பெண்களுக்கு கல்வியை வழங்கி வருகிறது. அதிலும், பிரபலமான இந்த மில்லில் பெண் கல்வியியல் என்ற தனிப்பிரிவும், அதில் 65 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மில்லில் இயங்கி வரும் இந்த பெண் கல்வியியல் பிரிவில், இதுவரை 31,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் பட்டம் பெற்றுள்ளனர். மில் தொழிலாளிகளாக வரும் மாணவிகள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைத்து பணியிலும் அமர்ந்துள்ளனர்.
இந்நிலையில், நடப்பாண்டு நடைபெற்ற திறந்தநிலை பல்கலைக் கழகத்திற்கான பட்டமளிப்பு விழாவில், இதே மில்லில் பகுதி நேரமாக பணிபுரிந்து பட்டம் பெற்றவர்களில் 8 தனித்தனிப் பிரிவுகளில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். C. ப்ரீத்தி (B.A. Tamil), V. புவனேஸ்வரி ( BCA), V. தனலட்சுமி ( B.Com), சத்யா ( B.Com CA ), V.இலக்கியா ( B.Com CA ), V.ஹேமலதா ( B.Com CA ), K. சாவித்ரி ( BBA), M. நிவேதா ( BCA) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.