தமிழ்நாடு முழுவதும் முதல்கட்டமாக இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் கோவை மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்த ஊராட்சி ஒன்றியங்களில் 1,220 பதவிகளுக்கு 2,939 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 350 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 293 வாக்குச்சாவடி மையங்களில் 642 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 148 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை எனக் கண்டறியப்பட்டு 48 வாக்குச்சாவடி மையங்களில் ஒளிப்பதிவு செய்யவும், 24 மையங்களில் வெப் கேமரா மூலம் கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்தல் பணியில் 4,494 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர் இதுதவிர பாதுகாப்பிற்காக 2,350 காவலர்களும் 100 முன்னாள் ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.