கோயம்புத்தூர்:ஐரோப்பா கண்டத்தில், சர்வதேச எரிசக்தி படகுப் போட்டியில் பேட்டரி, சோலார் மற்றும் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகை உருவாக்கி, கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர். ஒரு நாட்டில் ஒரு குழுவினருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கும் ஐரோப்பா கண்டத்தின் மொனாக்கோ நாட்டில் நடக்கும் சர்வதேச எரிசக்தி படகு போட்டிக்கு, கோவையைச் சேர்ந்த குமரகுரு கல்லூரி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் இருக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களை, வழக்கமான எரி சக்தியைப் பயன்படுத்தாமல் பேட்டரி மற்றும் சோலார் போன்ற மாற்று எரிசக்தி மூலம் இயங்கும் படகுகளை உருவாக்க மொனாக்கோ நாட்டு அரசு ஊக்குவித்து, ஆண்டுதோறும் சர்வதேச ஆற்றல் படகுப் போட்டி நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு வருகிற ஜூலை 3ஆம் நாளில் இருந்து 8ஆம் தேதி வரை படகுப் போட்டிகள் நடைபெறுகிறது.
ஒரு நாட்டில் ஒரு குழுவினருக்கு மட்டுமே இந்த வாய்ப்பை வழங்கி வரும் மொனாக்கோ நாட்டு அரசு, பல்வேறு விதிமுறைகள் அடிப்படையில் இந்தியா சார்பில் பங்கேற்க தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமரகுரு கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு வாய்ப்பினை வழங்கி உள்ளது.