கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் அரசு மருத்துவமனை முதல்வர் காளிதாஸ், குழந்தைகள் நல மருத்துவர் பூமா, குழந்தைகள் அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் வெங்கடேஷ் மோகன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்கள்.
முதலில் பேசிய மருத்துவமனை முதல்வர் காளிதாஸ், "கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் ஒரு மாத காலத்தில் 25 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அதில் 10 குழந்தைகள் பிறவியிலேயே உடலில் குறைபாடுகளுடன் (உணவு குழாய் அடைப்புடன் பிறப்பது, ஆசன குழாய் ஒட்டி இருப்பது, குடல் அடைப்பு) பிறந்து அவைகளுக்குச் சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் குழந்தைகள் பிறந்து ஏழு மாத காலத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளாகும்" எனத் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு அதன்பின் பேசிய குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் பூமா, "கரோனா தொற்று பாதிப்பில் சென்னையைக் கடந்துவிடுமோ என்று எண்ணிய நேரத்தில் அரசு எடுத்த முயற்சியினாலும், மக்களின் முயற்சியினாலும் கோயம்புத்தூரில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
கரோனா தொற்று வருவதற்கு முன் இருந்ததைவிட பிரசவங்கள் தற்போது அதிகமாகியுள்ளன. அதே சமயம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பும் அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று வருவதற்கு முன் 600 பிரசவங்கள் வழக்கமாக நடைபெற்றுவந்த நிலையில் தற்போது 900, 950-க்கும் மேல் வரை பிரசவங்கள் நடைபெற்றுவருகின்றன.
குழந்தைகளுக்கு தற்போது விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்து விளையாடி அதன் மூலம் அதிகம் காயப்படுகின்றனர். கீழே விழுந்து அடிபடுவது, சுடு நீர் காயங்கள், முள் அல்லது ஆணி காயங்கள், நாய்க்கடி இதுபோன்று பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இருப்பினும் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மக்கள் தற்போது அதிகமாக அரசு மருத்துவமனைக்கு வரத் தயங்குகின்றனர்.
ஆனால் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் தனியாகவும், பிற மருத்துவச் சிகிச்சைகள் தனியாகவும் சிறப்பான முறையில் இயங்கிவருவதால் மக்கள் யாரும் பயப்படாமல் சிகிச்சை மேற்கொள்வதற்கு வரலாம்" எனக் கூறினார்.
அதன்பின் பேசிய குழந்தைகள் அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் வெங்கடேஷ் மோகன், "இந்த ஒரு மாதத்தில் மட்டும் குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவில் 25 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் இந்தக் கரோனா தொற்று காலத்தில் செய்தது மிகவும் சாதனை வாய்ந்த ஒன்றாக கருதுகிறோம்.
மேலும், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் பிரிவு சிறப்பான முறையில் இருப்பது மிகவும் உதவியாக உள்ளது. அதேசமயம் மயக்கவியல் துறையும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அனைவரும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து சிறப்பான முறையில் செய்துவருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!