கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மறைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசாமியின் உருவம் பொறித்த முகமூடி அணிந்துவந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், "வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியை விட்டு வெளியே வந்து பயிர்களை நாசப்படுத்தும் வனவிலங்குகளைச் சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வனவிலங்குகள் அதிகளவில் வனத்தை விட்டு குடியிருப்புப் பகுதிக்குள் வருவதால் மக்களும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்க வேண்டும்" என்றார்.