கோயம்புத்தூர் : மருதமலை மற்றும் தடாகம் வனப்பகுதியில் இப்போது அதிக அளவிலான யானைகள் நடமாட்டம் இருக்கிறது. இந்த யானைகள் தடாகம் வனப்பகுதியில் இருந்து மருதமலை வனப்பகுதிக்கும் மருதமலை வனப்பகுதியில் இருந்து தடாகம் வனப்பகுதிக்கும் அவ்வப்போது இடம் பெயர்ந்து வருகின்றன.
இதில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வரும் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு வருவது வழக்கம். இதில் சில யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வீடுகளில் வைக்கப்பட்டு இருக்கும் அரிசியை சாப்பிடுவது தொடர்ந்து வருகிறது. விவசாயப் பயிர்களைக் காட்டிலும் அரிசியை உண்பதை, ஒரு சில யானைகள் வழக்கமாக கொண்டுள்ளன. இதில் குட்டியுடன் வரக்கூடிய தாய் யானை தொடர்ந்து குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து அரிசியைச் சாப்பிட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஐஓபி காலனி பகுதியில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் பழங்களை அந்த யானைகள் சாப்பிட்ட நிலையில் ரேஷன் கடையை உடைத்தும் அரிசியை சாப்பிட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை மருதமலை கோவிலில் அருகே உள்ள லெப்ரசி காலனியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது.மேலும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசியை சாப்பிட முயன்றதால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.