கோயம்புத்தூர்: சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வரிகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் அதற்கு வட்டி வசூல் செய்யும் அரசாங்கமாக இந்த அரசு உள்ளது. மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டதில் இடம்பெற்றது தான் ஆசிரியர்களின் அந்த கோரிக்கை, அரசு பரிசீலித்து அவர்கள் அறிவித்த அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
இந்த அரசாங்கம் ஒரு சர்வாதிகார போக்கில் உள்ளது. அவர் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினையை சமூக வலைத்தளங்களில் எடுத்துச் சொன்னால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல், குறிப்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடுவது தான் இந்த அரசின் வாடிக்கையாக உள்ளது. இதற்கெல்லாம் ஒரு காலத்தில் பதில் சொல்லியாக வேண்டும்.
ஒட்டுமொத்தமாக அரசாங்கமே குளறுபடியாக தான் உள்ளது. அதனால்தான் காவல் துறையும் குளறுபடியாக உள்ளது. அரசாங்கம் நன்றாக இருந்தால் தான் காவல்துறை சரியான முறையில் செயல்படும், இங்கு தலைமையே சரியில்லையே. தினம்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்றவை எல்லாம் தான் அன்றாட நிகழ்வாக இருக்கிறது.
தொலைக்காட்சியிலும் பத்திரிகை செய்தியிலும் இதுபோன்ற செய்திகள் தான் இடம் பெறுகிறது. மேலும் பொம்மை முதலமைச்சர் ஆளுகின்ற நாட்டில் இது போன்ற நிலைமை தான் நிலவும் என்றார். நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் போட்டி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அது அவர் கூறுகிறார் அதற்கு நான் என்ன செய்ய முடியும். மக்களிடத்தில் யார் யாருக்கு எதிரி என்று கேட்டால் மக்கள் தெளிவாக பதில் அளிப்பார்கள். அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி. நீண்ட காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி இது. மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கக் கூடிய இந்த கட்சியை வேண்டும் என்றே திட்டமிட்டு சில பேர் கூறுவதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் மாய உலகத்தில் மிதந்து கொண்டு இருப்பதாகவும் நாடாளுமன்ற தேர்தல் வரும் பொழுது அதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்றார். பாஜக மேலிடத்தில் பேச்சுவார்த்தை ஏதேனும் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, அது ஒரு பொழுதும் கிடையாது. அதிமுக ஏற்கனவே தெளிவான முடிவை எடுத்து அறிவிக்கப்பட்டு விட்டது. பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் தான் ஏதாவது ஒரு ஃ வைத்துப் பேசி வருவதாகவும் கூறினார்.
மேலும், இப்பொழுது ஆசிரியர்கள் போராட்டம் குறித்து ஏதேனும் தொலைக்காட்சிகளில் விவாத மேடைகள் நடைபெறுகிறதா என கேள்வி எழுப்பிய அவர் ஊடகங்களுக்கு இந்த அரசின் மீது பயம் உள்ளதாகவும் சாடினார். கூட்டணி குறித்து வி பி துரைசாமி கூறுகின்ற கருத்திற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது எனவும் எங்களுடைய நிலைப்பாட்டையும் தீர்மானத்தையும் நாங்கள், தெளிவாக அறிவித்து விட்டோம் எனவும் தெரிவித்த அவர், தினம்தோறும் இது குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தால் நாங்கள் என்ன தான் செய்வது என வினவினார்.
எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க வேண்டும், தமிழ்நாடு வளர்ச்சி பெற புதிய திட்டங்கள் வழங்கப்பட வேண்டும், அதிக நிதி ஒதுக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். இதுதான் எங்களுடைய பிரதான கோரிக்கை என்று கூறிய அவர் யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறுகின்ற பொழுது இதனை முன் நிறுத்துவோம் என தெரிவித்தார்.
தமிழ்நாடு மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய தேசிய கட்சிகள் அந்தந்த மாநில பிரச்சனைகளைத் தான் அவர்களும் முன்னெடுக்கிறார்கள் எனவும் கூறிய அவர் உதாரணத்திற்காக கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குகிறதா? இங்க இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியினர் தண்ணீர் வேண்டும் என கேட்கிறார்கள், ஆனால் அங்கு இருக்கக்கூடிய காங்கிரஸ் அரசாங்கம் தண்ணீர் விடுவதில்லை.