கோயம்புத்தூர்: கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்டவர்கள் யாரும் வெற்றி பெறாத நிலையில் 10 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்டங்களை கண்காணிக்க, கோவை மாவட்டத்துக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் அதிரடியாக தனது பணிகளை செந்தில் பாலாஜி துவக்கினார். எந்த கூட்டம் நடத்தினாலும் அதை பிரமாண்டமாகவே செய்தார் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைக் கூட்டினார்.
மேலும் ஆயிரக்கணக்கானோரை திமுகவில் இணைய செய்தது, நலத்திட்ட உதவிகள் பெரிய அளவில் வழங்கியது, என தனது செயல்பாட்டினை அமைச்சர் செய்து கொண்டு இருந்தார். அதே சமயம் டாஸ்மாக் கடைகளில் இருந்து உள்ளூர் பிரமுகர்களுக்கு (ஆளும் கட்சியினர்) வரக்கூடிய மாமூல்களை தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு (கரூர் நபர்கள்) மட்டும் சென்றடையும் வகையில் பார்த்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் உள்ளூர் திமுகவினர் அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். எனினும், அவர் பொறுப்பு அமைச்சர் என்பதால் அதனை வெளிக்காட்டாமல் பணியாற்றி வந்தனர். அதே சமயம் திமுக நிர்வாகிகள் தங்கள் பணிகளை சரியாக செய்ய வேண்டும், திமுக எந்த ஒரு இடத்திலும் தோல்வியை தழுவக் கூடாது, அப்படி தழுவினால் அந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து வந்தார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனை தொடர்ந்து கோவை மாவட்ட திமுகவில் ஐந்து மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்த நிலையில், அதை மூன்றாக மாற்றினார். சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு ஆகிய தொகுதிகள் கோவை மாநகர் மாவட்டமாகவும், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், அவிநாசி தொகுதிகள் கோவை வடக்கு மாவட்டமாகவும் மாற்றப்பட்டது.