கோயம்புத்தூர்: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று (ஜன.5) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 2023ஆம் ஆண்டு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் லைப் கார்டு, பள்ளிக்கூடம் 2.0, மிஷன் கல்லூரி, அதிநவீன சிசிடிவி கட்டுப்பாட்டு அறை என பல்வேறு திட்டங்களை துவங்கி செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் விழுந்து சுற்றுலாப் பயணிகளின் உயிரிப்புகளைத் தடுக்கும் வகையில், கடந்த 2023 பிப்வரி மாதம் "லைப் கார்டு" என்ற பெயரில் மாவட்ட காவல்துறை சார்பில் 10 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர், கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் ஆற்றில் தவறி விழுந்த 700 பேரை காப்பாற்றியுள்ளனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற 11 பேரை தடுத்து காப்பாற்றியுள்ளனர். கடந்தாண்டில் மட்டும் 'புரோஜெட் பள்ளிகூடம்' மூலம் 1.40 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கொடுத்துள்ளோம். 35 பள்ளிகளைச் சேர்ந்த 1,500 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் ஆயிரத்து 950 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் 449 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 590 பேர் கைது செய்யப்பட்டு, 742 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் மட்டும், 189 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் 74 கடைகள் அகற்றப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறி குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 120 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.