கோயம்புத்தூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் காவலர்களுக்கு பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை எவ்வாறு விசாரிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளோம்.
பெற்றோருக்கு தெரியாமல் குழந்தை திருமணம் நடந்ததாக 73 வழக்குகள் பதிவாகியுள்ளன. முகம் தெரிந்தவர்கள் மூலம் பெண் குழந்தைகளுக்கு நடந்த பாலியல் குற்றங்கள் தொடர்பாக 32 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெற்றோர் குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக 50 வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதைத் தவிர்த்து ஆபாச புகைப்படங்கள் எடுத்ததாக 50 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றை குறைக்கும் நடவடிக்கையாக மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். குறிப்பாக ஆன்லைன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
போக்சோ வழக்கு குறித்து பேட்டி இதற்கு பள்ளி நிர்வாகம், குழந்தைகளை வளர்க்கும் முகாம்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குழந்தை திருமணம் குறித்து புகார்கள் இருந்தால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். போக்சோ வழக்கில் கைதாக கூடிய அனைவர் மீதும் குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகிறோம்.
கோவையில் 142 குவாரிகள் இயங்கி வருகிறது. இதில் அதிக எடையை கொண்டு செல்லும் லாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
திருட்டு சம்பவங்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளை தினசரி வழக்குகளாக பதிவு செய்து வருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 115 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. குழந்தைகளின் மீது பெற்றோர்களின் அன்பு குறைவாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். பெற்றோர் அதிக கவனிப்புடன் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 21 இடங்களில் ஐ.டி.ரெய்டு... பின்னணி என்ன?