கரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்த ஆலோசனைகளை மேற்கொண்டுவருகின்றன. அதனடிப்படையில், அனைத்து முதலமைச்சர்களிடமும் பிரதமர் இன்று காணொலி மூலம் பேசவிருக்கிறார்.. இந்நிலையில், இன்று கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு பிரசுரங்கள் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’கோவையில் கடந்த செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் வைரஸ் தொற்று அதிக அளவில் இருந்த நிலையில் அரசு துறையின் தொடர் நடவடிக்கையால் தன்னார்வ அமைப்பு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் வைரஸ் தாக்கம் குறைந்திருந்தது. அதனால், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 40 பேராக குறைந்தது.
தற்பொழுது மீண்டும் வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில், சில மாவட்டங்களில் பாதிப்பது அதிகமாக உள்ளது. மேலும், வைரஸ் தொற்று இல்லை என்ற மனநிலையோடு பொதுமக்கள் தற்போது வெளியே வர தொடங்கியுள்ளனர். அரசியல் நிகழ்ச்சிகள் திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் முகக்கவசம் அணிவது குறைந்து வருகிறது.