கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ஷீலா. இவரது கணவர் 13 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்தார். இவர்களுக்கு ராமசாமி (14) என்ற மகன் உள்ளார். இவர் மாற்றுத்திறனாளி. ஷீலாவுக்கு தங்க வீடு கிடையாது. இருவரும், மணியம்மாள் என்ற மூதாட்டியின் உதவியுடன் அவரது வீட்டிலே 13 ஆண்டுகளாக வாழ்ந்துவருகின்றனர். இருவர்களுக்கு உறவு முறை இல்லை என்றாலும், மனிதநேயத்துடன் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் மூதாட்டி மணியம்மாள். ஷீலாவின் மகன் மாற்றுதிறனாளி என்பதால், அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய இருந்தது. .
இதனால் ஷீலாவால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மூதாட்டி மணியம்மாள் கோவையில் உள்ள ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலைக்கு ரூ.6,500 ஊதியத்துக்கு சென்று, இருவரையும் காத்துவந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் வரை மூதாட்டி மணியம்மாள் வேலைக்கு சென்றுவந்த நிலையில் வயது மூப்பு காரணமாக பணியை துறந்தார். 4 ஆடுகளை வாங்கி பராமரித்து வருகிறார். தனக்கு பின், ஷீலாவையும், அவரது மகனையும் கவனித்துக்கொள்ள ஆள் இல்லாமல் போகும் என்பதை உணர்ந்த மணியம்மாள், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் மனு அளித்துள்ளார்.