கோயம்புத்தூர்:வருகின்ற 17-ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கில் கலந்து கொள்ள, அனைத்து ஜவுளித் தொழில்முனைவோர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் துணிநூல், ஆயத்த ஆடைகள் மற்றும் சந்தையில் தொழில்நுட்ப ஜவுளிகள் 13 சதவீதம் பங்களிப்பு வழங்குகின்றன.
தொழில்நுட்ப ஜவுளித்துறை ஆண்டிற்கு 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் சந்தை மதிப்பில் 45 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் தொழில்நுட்ப ஜவுளித்துறை நேரடியாக 12 லட்சம் நபர்களுக்கும், மறைமுகமாக 50 லட்சம் நபர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது.
இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) மூலமாக வருகின்ற 17.11.2023 அன்று கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் லீ மெரிடியனில், தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) ஆகியவை இணைந்து தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடத்த உள்ளன.