துபாயில் இருந்து விமானம் மூலம் 100க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தனர்.
அங்கு கரோனா பரிசோதனை மேற்கொண்ட பின், தொடர்ந்து அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வர அனைவரும் முயற்சித்தனர். ஆனால் முறையாக இ-பாஸ் விண்ணப்பிக்காததால் அவர்கள் அனைவரும் தமிழ்நாடு - கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் நேற்று பிற்பகல் முதல் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாமல் அனைவரும் வாளையார் சோதனைச் சாவடியில் தவித்து வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து தகவலறிந்த மதுக்கரை வட்டாச்சியர் சரண்யா, சோதனைச் சாவடிக்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் முறையாக இ-பாஸ் எடுக்க அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது குறித்துப் பேசிய விமானப் பயணிகள், தாங்கள் மூன்று மாதங்களாக வேலை இல்லாமல், கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தில் விமான டிக்கெட் எடுத்து வந்ததாகவும், நேற்று முதல் தங்களை அனுமதிக்க மறுத்து நீண்ட நேரமாக தமிழ்நாடு அலுவர்கள் வாளையார் சோதனைச் சாவடியில் காக்க வைத்ததாகவும் வேதனைத் தெரிவித்தனர்.
இதையடுத்து துபாயில் இருந்து வந்தவர்களை மாவட்டவாரியாகப் பிரித்து அவர்களுக்கு இ-பாஸ் வழங்கவும், அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் வருவாய்த் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க :'முதலமைச்சரை பற்றி குறை கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்'- துணை சபாநாயகர்!