கோயம்புத்தூர்: கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுமார் 4.600 கிராம் (575 பவுன்) தங்க நகைகள், வைரம், பிளாட்டினம் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மாநகர வடக்கு துணை ஆணையர் சந்தீஸ் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டு, அந்த நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. மேலும் கொள்ளை நடந்த இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் பேருந்து நிலையங்கள் என 400க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பொள்ளாச்சியில் இருந்து பேருந்தில் வந்து, தனி நபராக இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு கிடைத்த கைரேகைகளை கொண்டு விசாரணையில் ஈடுபட்ட போது, அந்த நபர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீது கோவை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பல திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
மேலும் தனிப்படை போலீசார் நடத்திய புலன் விசாரணையில், விஜய் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் உள்ள தனது நண்பர் சுரேஷ் என்பவரது வீட்டில் மனைவியுடன் தங்கியிருந்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் பொள்ளாச்சி சென்ற நிலையில், வீட்டில் தங்கியிருந்த விஜய் தகவலறிந்து வீட்டின் மேற்கூரையை பிரித்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் விஜயின் மனைவி நர்மதாவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்க நகைகளை மீட்டு, நர்மதாவையும் கைது செய்தனர். தற்போது தப்பியோடிய விஜயை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோஸ் ஆலுக்காஸ் நகை கொள்ளை வழக்கில் மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் தலைமையிலான தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு திருடப்பட்ட நகைகளை மீட்டுள்ளனர். கோவை துணை ஆணையராக சந்தீஸ் பதவியேற்றதில் இருந்து, இதுபோன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சந்தீஸ்?: ஆந்திரா மாநிலம் சித்தூரை பூர்வீகமாக கொண்ட சந்தீஸ், தனது ஐபிஎஸ் பயிற்ச்சிக்கு பின்னர் முதன் முதலாக 2021ல் தூத்துக்குடியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றார். அப்போது தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திய ரூ.1 கோடி மதிப்பிலான முந்திரி கடத்தல் வழக்கில் திறம்பட செயல்பட்டு கடத்தல் கும்பலை கைது செய்தார். அதேபோல ஆந்திராவில் இருந்து தூத்துக்குடி துறை முகம் வழியாக வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து கடத்தல் கும்பலை கைது செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கோவை மாநகர துணை ஆணையராக பதவியேற்றார். அப்போது கோவை மாநகரில் அதிகளவில் கஞ்சா பொருட்கள் புழக்கத்தில் இருந்த நிலையில், அதனை தனிப்படை மூலம் முற்றிலும் குறைக்க அதிரடி நடவடிக்கை எடுத்து 100க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளையும், ரவுடிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.