தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் புலம்பெயர் தொழிலாளர்கள் உடன் காவல் ஆணையர் பேச்சுவார்த்தை!

கோவையில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலில் ஒருவர் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர் என வாக்குமூலம் அளித்துள்ளார் என கோவை மாநகர காவல் ஆணையாளர் கூறியுள்ளார்.

கோவையில் புலம்பெயர் தொழிலாளர்கள் உடன் காவல் ஆணையர் பேச்சுவார்த்தை!
கோவையில் புலம்பெயர் தொழிலாளர்கள் உடன் காவல் ஆணையர் பேச்சுவார்த்தை!

By

Published : Mar 14, 2023, 6:01 PM IST

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: கோவையில் உள்ள டவுன்ஹால் இடையர் வீதியில் நேற்று (மார்ச் 13) இரவு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கபட்டவரில் ஒருவர் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன் மற்றும் வேல்முருகன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரம் இந்த சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து அரசு மற்றும் காவல் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் நேற்று நடந்த சம்பவத்தில் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஏதேனும் புகார்கள் இருந்தால் உடனடியாக காவல் துறையினரிடம் தெரிவிக்குமாறும், அதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், “நேற்று நடந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவம் நடைபெற்றபோது கைது செய்யப்பட்டவர்கள் குடிபோதையில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது இது குறித்து மேற்கு வங்கத் தொழிலாளர்களிடம் கலந்துரையாடி உள்ளோம்.

இந்த வழக்கில் பிரகாஷ் என்பவர் இந்து முன்னணி அமைப்பில் இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவரது செல்போனில் அதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன. இதில் சூர்யா என்ற முருகன், ஏற்கனவே இந்து முன்னணியில் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தொடர் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காவல் துறையினரைத் தொடர்பு கொள்ள பிரத்யேக அலைபேசி எண்கள் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அலைபேசி எண்கள் அச்சிட்ட கார்டுகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இல்லை என்றாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் சிறையில் அடைக்கப்பட்டவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்து தொடர் விசாரணை மேற்கொள்ள உள்ளோம்” என தெரிவித்தார். இந்த நிகழ்வில் கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஸ் உள்பட காவல் துறையினர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details