கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. நாளொன்றிற்கு 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் அவர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
பின்னர், அவர் இன்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் அறை, முதல் தளம் ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டன. முதல் தளத்தில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், கரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.