கோயம்புத்தூரில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து கோவை மாநகரில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் மட்டுமின்றி சிறப்பு காவல் படை, தமிழ்நாடு காமாண்டோ படை, அதிவிரைவுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
மொத்தமாக கோவை மாநகர காவலர்கள் மற்றும் வெளிமாவட்ட காவலர்கள் என மொத்தம் 4ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், இஸ்லாமிய இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் அமைதிக் கூட்டமும் போடப்பட்டது.
பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் சுதாகர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசணை மேற்கொண்டார். சட்டம் ஒழுங்கு தொடர்பாக இந்த ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசணை கூட்டத்திற்கு பிறகு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தலைமை செயலாளர் தலைமையில் 17 மாவட்ட உயரதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கோவையில் தொடர் சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். கோவை மாவட்டத்தில் நடந்த ஏழு சம்பவங்களில் உயிர் மற்றும் உடமைகள் சேதம் அடையவில்லை.
பொதுமக்கள் பதட்டமோ, அச்சமோ பட வேண்டிய சூழல் இல்லை. சிடிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மத நல்லிணக்கத்திற்கான கூட்டங்கள் நடத்தி வருகிறோம். 94 ஜமாத் தலைவர்களுடன் கூட்டம் நடைபெற்றது. மாலை இந்து அமைப்புகளின் தலைவர்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது. அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஊரக மற்றும் மாநகரப் பகுதிகளில் சம்பவங்கள் நடந்தாலோ, வெளி மாநிலம் அல்லது வெளி மாவட்ட நபர்கள் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் அளிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில சமூக வலைதளங்களில் மக்களிடம் பதட்டத்தை உருவாக்கும் வகையில் வெடிகுண்டு வீசப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது. வெடிகுண்டு வீச்சு நடைபெறவில்லை. இன்னும் ஒரிரு நாளில் தனிப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், “அனைத்து சம்பவங்களிலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்வதால் வாகன எண்ணை சிசிடிவியில் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒரு சில குற்றவாளிகள் அடையாள காணப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புதல், இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் பதிவிடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியை சீர்குலைப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். கோவையில் 3ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படுகிறது. 28 புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் பின்னணி என்ன? - முழு விவரம்