கோவை: மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைத்து இரவு பகலாக வாகன தணிக்கை நடைபெறுகிறது. புறநகர் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் முழுவதும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி வருவதால் வழக்கமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுதான் என தெரிவித்தனர். இதே போன்று 1997ம் ஆண்டு நடைபெற்ற கோவை கலவர சம்பவம் நிகழ்ந்த நாளையொட்டியும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு காவலர் செல்வராஜ் என்பவர் அல் உம்மா அமைப்பினரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற கலவரத்தில் 18 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் விதமாக கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வைக்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் நிகழ்ந்த நாள் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, உக்கடம், டவுண் ஹால், ரயில் நிலையம், கோயில்கள் முன்பு என மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கார்வெடிப்பு சம்பவத்தால் இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.