தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கார் வெடித்த வழக்கு: 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி - Coimbatore car explosion case

கோவையில் கார் வெடித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரை, மூன்று நாட்கள் நீதிமன்றக்காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

d
d

By

Published : Oct 26, 2022, 9:24 PM IST

Updated : Oct 26, 2022, 10:26 PM IST

கோவை: கோயம்புத்தூரின் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த 23ஆம் தேதியன்று அதிகாலை மாருதி கார் வெடித்துச் சிதறியதில் கார் இரண்டாக உடைந்தது. சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியைச்சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கோவை மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்கத்தேவையான பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியைச்சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

இதனைத்தொடர்ந்து கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். இதனால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. இதனிடையே தேசிய புலனாய்வு முகமை டிஜஜி வந்தனா மற்றும் எஸ்.பி. ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர். காவல் துறை அலுவலர்களிடம் இந்த வழக்குத்தொடர்பான விவரங்களை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கேட்டறிந்தனர்.

கோவையில் கார் வெடித்த வழக்கு: 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
இந்நிலையில் கோவை கார் வெடிப்பில் கைதான முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர்.

5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ராஜசேகர் உத்தரவிட்டார். கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், அதில் அவர்களது பங்கு உள்ளதா என்பது குறித்தும் 5 பேரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் புலன் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு: சயானின் ஜாமீன் நிபந்தனை தளர்வு; மாதத்தில் ஒருமுறை ஆஜரானால் போதும்

Last Updated : Oct 26, 2022, 10:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details